Tuesday, September 2, 2008

தொழிலாளர்களின் பி.எப். பணம் தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து பு.ஜ.தொ.முவின் பிரச்சாரம் - ஆர்ப்பாட்டம்.

கடந்த ஜூலை 22 –இல் நடந்து முடிந்த நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுபின் போது பணப்பெட்டி கொடுத்தும் பதவி ஆசை காட்டியும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டவுடனேயே, அப்பட்டமாக மறுகாலனியாக்கக் கொள்கைகளைச் செயல்படுத்தக் கிளம்பிவிட்டது காங்கிரசு கூட்டனி அரசு. எம்.பி.க்களை விலைக்கு வாங்க உதவிய தரகுப் பெரு முதலாளிகளுக்குக் காணிக்கை செலுத்தும் வகையில், தொழிலாளர்களின் 56 ஆண்டுகால சேமநல நிதி (பிராவிடண்ட் பண்ட்)யான ரூ. 2.5 லட்சம் கோடியை ரிலையன்ஸ் உள்ளிட்ட மூன்று பெரும் முதலாளித்துவ நிறுவனங்களிடம் கடந்த ஜூலை இறுதியில் தாரை வார்த்துள்ளது. இந்திய அரசின் ஸ்டேட் வங்கி பராமரித்து வந்த இந்நிதியைத் தற்போது ரிலையன்ஸ் கேபிடல், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்சியல், ஹெச்.எஸ்.பி.சி. மற்றும் ஸ்டேட் வங்கி ஆகிய நான்கு நிறுவனஙளுக்கு பங்கு பிரித்துத் தந்துள்ளது, மன்மோகன் சிங் அரசு. இதன் மூலம் தொழிலாளர்களின் உழைப்பால் திரண்ட கோடானுகோடி நிதியையும் தொழிலாளர்களின் எதிர்கால வாழ்வையும் பன்னாட்டு – இந்நாட்டு பெருமுதலாளிகளின் இலாப வெறிக்குப் பலியிட்டிருக்கிறது. இதன்மூலம் இப்பெருமுதலாளித்துவ நிறுவனங்களின் தொழிலுக்கான நிதியாதாரத்தை உருவாக்கித் தரும் தரகு வேலையை சிங் – சிதம்பரம் கும்பல் செய்துள்ளது. பங்குச்சந்தை தரக்வன் அர்சத் மேத்தாவின் சூதாட்டத் திருவிளையாடலில் பல லட்சம் கோடிகள் சூறையாடப்பட்டதைப் போல, பி.எப். பணத்தை சந்தை சூதாட்டத்தில் இறக்கி இந்நிறுவனகள் சூறையாட ஏற்பாடு செய்துள்ளது.

இது, தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்னும் மறுகாலனியாக்கத் தாக்குதல்; மன்மோகன் சிங் – சிதம்பரம் கும்பலின் உலக வங்கிக் கைக்கூலித்தனத்தின் குறியீடு என்பதை விளக்கி தமிழகமெங்கும் பிரச்சார இயக்கத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வீச்சாக நடத்தி வருகிறது. “தொழிலாளர்களின் பி.எப். பணம் தனியாரிடம் ஒப்படைப்பு! கள்ளனிடமே சாவியைக் கொடுத்த அயோக்கியத்தனம்!” என்ற முழக்கத்துடன் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளுடன் இணைந்து துண்டு பிரசுரம், சுவரொட்டிகள், தெருமுனைக் கூட்டங்கள், ஆலைவாயிற் கூட்டங்கள் வாயிலாக பு.ஜ.தொ.மு. தொழிலாளர்களிடம் பிரச்சாரம் செய்து அரசியல் விழிப்புணர்வூட்டி வருகிறது.

எந்த ஓட்டுக் கட்சியும் தொழிற்சங்கங்களும் தொழிலாளி வர்க்கத்தின் மீது ஏவி விடப்பட்டுள்ள இத்தாக்குதலுக்கு எதிராகப் போராட்டங்களைக் கட்டியமைக்க முன்வராத நிலையில், சென்னை – மெமோரியல் அரங்கம் அருகில் 06.08.08 அன்று பு.ஜ.தொ.மு. எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பு.ஜ.தொ.மு. மாநிலச் செயலர் தோழர் சுப.தங்கராசு தலைமையில் விண்ணதிரும் முழக்கங்களுடன் திரளான தொழிலாளர்களின் பங்கேற்புடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், தனியார்மயம் – தாராளமயத்தின் கோரகுகத்தைத் திரைகிழித்தது. தொழிலாளர்கள் ஓரணியில் திரண்டு போராட அறைகூவுவதாக அமைந்தது.

தொழில் நகரமான ஓசூரில் இயங்கி வரும் பு.ஜ.தொ.மு. தனது தோழமை அமைப்புகளுடன் இணைந்து 11.08.08 அன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, தொழிலாளர் சேமநல நிதியை தரகுப் பெருமுதலாளிகளுக்குத் தாரை வார்த்த மன்மோகன் சிங் – சிதம்பரம் கும்பலை எதிர்த்து போர்க்குணமிக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. கண்டன முழக்கங்கள் எங்கும் எதிரொலிக்க தோழர் சங்கர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் தொழிலாளர்களிடமும் உழைக்கும் மக்களிடமும் போராட்ட உணர்வூட்டி புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்களோடு முடங்கி விடாமல், “கொள்ளை போகிறது தொழிலாளர் உழைப்பு! அள்ளிக் கொடுப்பதோ காங்கிரசு கும்பல்! சுருட்டப் போவதோ பன்னாட்டு – இந்நாட்டுக் கம்பெனிகள்!” எனும் முழக்கத்துடன் பி.எப். பணத்தைத் தாரை வார்த்துள்ள காங்கிரசு கூட்டனி அரசுக்கு எதிராகப் போராட அறைகூவி மாநிலமெங்கும் தொடர் பிரச்சார இயக்கத்தை பு.ஜ.தொ.மு. நடத்தி வருகிறது.

- பு.ஜ. செய்தியாளர்கள்

0 comments: