Monday, August 4, 2008

ஓசூரை ஆக்கிரமிக்க வரும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை விரட்டியடிப்போம்!


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேன்கனிக்கோட்டை வட்டங்களைச் சேர்ந்த அச்செட்டிப்பள்ளி, ஒன்னல்வாடி, பைரமங்கலம், குந்துமாரனப்பள்ளி ஊராட்சிகளில் 3600 ஏக்கர் நிலங்களை உள்ளடக்கி அறிவிக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு, நிலங்களைக் கையகப் படுத்துவதற்கான அரசாணை கடந்த ஜூன் 11-ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், தமிழக அரசுக்கும், ஜி.எம்.ஆர். நிறுவனத்துக்கும் பல்தொழில்நுட்பம் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க ஒப்பந்தம் கயெழுத்தானதைத் தொடர்ந்து, தற்போது நிலப்பறிப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் நிலங்களைக் கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட அளவீட்டின்படி, 2930 ஏக்கர் வரை வறண்ட நிலங்கள் என்றும், 363 ஏக்கர் வரை புறம்போக்கு நிலங்கள் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இப்பகுதியில் ஏறத்தாழ 2500 ஏக்கர் பரப்பளவில் ஆழ்துளை கிணறுகள் மூலம் காய்கறிகள் பயரிடப்பட்டு வருகின்றன. இவ்விளை நிலங்களை ஆக்கிரமித்து விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறித்து சி.பொ.மண்டலம் நிறுவக் கிளம்பியுள்ளது மு.க.அரசு. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், சி.பொ.மண்டலத்துக்கு எங்கள் விளைநிலங்களை வழங்க மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடியேற்றினர்.

இதன் தொடர்ச்சியாக, இப்பகுதி விவசாயிகளின் அழைப்பின் பேரில் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் தலைமையேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இரயில் மறீயல் போராட்டம் நடத்த முயன்று கைதாகினர். தா.பாண்டியனோ, "நாங்கள் சி.பொ.மண்டலத்துக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால் விளைநிலங்களை ஆக்கிரமித்து விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கக் கூடாது" என்கிறார்.

சி.பொ.மண்டலம் என்பது பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பளிக்கும் தொழிற்பேட்டை அல்ல; இது, நாட்டையே அடிமையாக்க வரும் அன்னியப் பிரதேசம் என்று நிரூபிக்கப்பட்ட பிறகும், சி.பொ.மண்டலத்தை ஆதரித்து, அதேசமயம் விவசாயிகளின் எதிர்ப்பைச் சாதகமாக்கிக் கொண்டு ஆதாயமடையத் துடிக்கின்றனர் வலதுகள்.

கடந்த ஆண்டில் சி.பொ. மண்டலத்துக்கு எதிராக சவடால் அடித்து, இப்பகுதியில் மக்களிடம் கருத்துக்கேட்பு நாடகமும், கருத்தரங்கமும் நடத்தி "எல்லோரும் வீட்டிற்குச் சென்று நிம்மதியாகத் தூங்குங்கள்; சி.பொ.மண்டலம் வராது; நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று வீரவசனம் பேசிய பா.ம.கவின் இராமதாசு, இப்போது அரசாணை வெளியாகிய பின்னர் எட்டிக்கூட பார்க்கவில்லை. "சவுண்டு" கொடுக்கவுமில்லை.


மறுபுறம், இத்தகைய ஓட்டுப் பொறுக்கிகளைப் புறக்கணித்துவிட்டு தங்களை அமைப்பாக்கிக் கொண்டு போராடிய மே.வங்கத்தின் நந்திகிராம மக்கள் சி.பொ.மண்டலத்தை விரட்டியடித்துள்ளனர். கோவா மாநில மக்களும் இதே வழியில் போராடி முதற்கட்ட வெற்றியைச் சாதித்துள்ளனர். ஒரிசா மாநில மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் முன்னேறி வருகின்றனர்.

இந்த உண்மைகளை விளக்கியும், ஏற்கெனவே இப்பகுதியில் சி.பொ.மண்டலத்துக்கு எதிராக விவசாயிகளைத் திரட்டி கருத்தரங்கம், ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளதோடு, தொடர்ந்து பிரச்சாரத்தை நடத்திவரும் விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் கடந்த 21.07.2008 அன்று ஓசூர் பழைய பேருந்து நிலையம் முன்பு "நாட்டை மீண்டும் அடிமையாக்கவரும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை விரட்டியடிப்போம்" என்ற முழக்கத்துடன் சாலை மறியல் போராட்டத்தை நடத்தின. தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து விவசாயிகளும் விவசாயிகள் இயக்க முன்னோடிகளும் பெண்கள் - குழந்தைகளுடன் திரண்டு, விண்ணதிரும் முழக்கங்களுடன் நடத்திய இச்சாலை மறியல் போராட்டம் நந்திகிராம மக்களின் வழியில் ஓசூர் மக்களும் சி.பொ.மண்டலத்தை விரட்டியடிப்பார்கள் என்பதை முன்னறிவிப்பதாக அமைந்தது.

‘புதிய ஜனநாயகம்’,
ஆகஸ்ட் 2008

0 comments: