Wednesday, July 23, 2008

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு: கொள்ளையடிப்பவர்கள் யார்?


அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தோடு இதுவரை காணாத வகையில் பெட்ரோல்-டீசல் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே போவதால், இந்த விலையேற்றம் தவிர்க்கவியலாதது என்று கூறி நியாயப்படுத்துகிறது அரசு. தேவையைக் காட்டிலும் 10% உற்பத்தி குறைந்துள்ளது; இப்பற்றாக்குறையின் காரணமாகவே பெட்ரோல்-டீசலின் விலை 4 மடங்கு உயர்ந்துவிட்டது என்று கூறுவது கடைந்தெடுத்த பொய். எண்ணெய் வர்த்தகத்தில் தலைவிரித்தாடும் ஆன்லைன் சூதாட்டமே எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணம்.

ஊக வணிக சூதாட்டக் கொள்ளையையும் உள்நாட்டு தரகுமுதலாளியான அம்பானியின் கொள்ளை இலாபத்தையும் மத்திய, மாநில அரசுகளின் மோசடி வரிகளையும் அம்பலப்படுத்தி தமிழகமெங்கும் எமது புரட்சிகர அமைப்புகளான ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகியவை தாங்கள் செயல்படும் பகுதிகளில் துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் வெளியிட்டு வீச்சான பிரச்சாரங்களை நடத்திவருகின்றன. “ரிலையன்ஸ் மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்களை அரசுடைமையாக்கு! ஆன்லைன் வர்த்தகச் சூதாட்டத்தைத் தடைசெய்! பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயும் மீதான அனைத்து வரிகளையும் ரத்துசெய்! கார் உற்பத்தியை நிறுத்து! முதலாளிகள் பயன்படுத்தும் சொகுசுக்கார்களுக்கு பெட்ரோல் விலையைக் கூட்டு! தொழிலாளி ஓட்டும் இருசக்கர வாகனத்துக்கு பெட் ரோல் விலையைக் குறை! அரசுப் பேருந்து போக்குவரத்தை அதிகமாக்கு!” எனும் எடுப்பான முழக்கங்களுடன் விலையேற்றத்துக்குக் காரணமான தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்தை வீழ்த்த அறகூவி, பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் தெருமுனைகளிலும் இவ்வமைப்புகள் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.

09.06.08 அன்று காரைக்குடியிலும், 22.06.08 அன்று சேலம் – தாகாப்பட்டியிலும் திரளான மக்கள் பங்கேற்புடன் இவ்வமைப்புகள் பொதுக்கூட்டங்களை நடத்தின. சென்னையில் 23.06.08 அன்று பல்லாவரம், பொன்னேரி, சேத்துப்பட்டு, மதுரவாயில் ஆகிய இடங்களில் தெருமுனைக் கூட்டங்களை நடத்தின. திருச்சியில் ஜூன் 25,26 தேதிகளில் துவாக்குடி, “பெல்” ஆலைவாயில், திருவரம்பூர், காட்டூர் ஆகிய இடங்களில் தொடர் தெருமுனைக் கூட்டங்களை மக்களின் உற்சாகமான வரவேற்புடன் நடத்தின. இதர பகுதிகளில் தெருமுனைக் கூட்ட – பொதுக்கூட்ட ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

‘புதிய ஜனநாயகம்’,
ஜூலை 2008

1 comments:

'))')) said...

நல்ல பதிவு...

நீங்கள் செயல் படும் விதம் அருமை...

போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.