Wednesday, September 3, 2008

அணுசக்தி துரோக ஒப்பந்தம்: - புரட்சிகர அமைப்புகளின் தொடர்ப்பிரச்சார இயக்கம்.


நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி மீண்டும் அழுகி நாறீய நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தை வீழ்த்திவிட்டு, மக்களுக்கு அதிகாரமளிக்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரளுமாறு மக்களை அறைகூவி, ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் கடந்த 22.07.08 அன்று தமிழகமெங்கும் அணுசக்தி துரோக ஒப்பந்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தின. அதன் தொடர்ச்சியாக, “அடிமையாக்குகிறது அணுசக்தி ஒப்பந்தம்; கொல்லுகிறது விலைவாசி; நாறுகிறது நாடாளுமன்றம்; இனி நாட வேண்டியது நக்சல்பாரிப் பாதையே!” எனும் முழக்கத்துடன் இவ்வமைப்புகள் தமிழகமெங்கும் வீச்சாகப் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.


06.08.08 அன்று ஈரோடு – அக்கிரகாரம், மாணிக்கம் பாளையம் – சூளை பகுதியில் தெருமுனைக் கூட்டங்கள், 11.08.08 அன்று ஈரோடு மாவட்டம் வெள்ளக் கோவிலில் பொதுக்கூட்டம், 13.08.08 அன்று கோவில்பட்டியில் பொதுக்கூட்டம், 14.08.08 அன்று சென்னை – பச்சையப்பன் கல்லூரி அருகே அரங்கக் கூட்டம், அதே நாளில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பொதுக்கூட்டம், 16.08.08 அன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் பொதுக்கூட்டம், 17.08.08 அன்று சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஆனைக்கவுண்டம்பட்டியில் பொதுக்கூட்டம், அதேநாளில் சென்னை – திருவெற்றியூரில் அரங்கக் கூட்டம், 21.08.08 அன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தாங்குடியில் பொதுக்கூட்டம், 22.08.08 அன்று தேனி மாவட்டம் தேவாரத்தில் பொதுக்கூட்டம், 25.08.08 அன்று சென்னை பல்லாவரத்தில் தெருமுனைக் கூட்டம் எனத் தொடர்ச்சியாக இவ்வமைப்புகள் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன. கேலிச்சித்திர கண்காட்சி, சிறுவர்களின் கலைநிகழ்ச்சி, குறுநாடகங்கள், ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி ஆகியவற்றோடு நடத்தப்பட்ட இப்பிரச்சார இயக்கம் உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அணுசக்தி துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கும் அதிகாரமே இல்லாத நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தையும், துரோகிகளான ஓட்டுக் கட்சிகளையும் திரைகிழித்துக் காட்டிய இப்பிரச்சார இயக்கம், நக்சல்பாரி புரட்சிப் பாதையில் போராட மக்களை அறைகூவுவதாக அமைந்தன.

- பு.ஜ. செய்தியாளர்கள்

Tuesday, September 2, 2008

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) அணுசக்தி ஒப்பந்த நகல் எரிப்புப் போராட்டம்.


இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள அணுசக்தி ஒப்பந்தம். இந்தியாவை அமெரிக்க வல்லரசுக்கு அடிமைப்படுத்தும் ஒப்பந்தம். இந்திய அணு விஞ்ஞானிகள் தோரியத்தைப் பயன்படுத்தி அணுசக்தி தயாரிக்க மேற்கொண்டுள்ள சுயசார்பான ஆய்வை ஒழித்துக் கட்டி, யுரேனியத்திற்காக அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலைமை இந்தியா மீது தணிக்கும் துரோக ஒப்பந்தம்.

இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்காவின் “ஹைடு” சட்டத்திற்குக் கட்டுப்பட்டது. இச்சட்டத்தின்படி, இந்தியாவின் அணுசக்தித் துறையை மட்டுமின்றி, நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் உரிமையினைக் கூட அமெரிக்கா எடுத்துக் கொண்டுள்ளது. இந்த உண்மைகளை மூடி மறைத்து விட்டு, நாட்டின் மின்சாரத் தேவையை நிறைவு செய்யவே இந்த ஒப்பந்தம் என்று அமெரிக்கக் கைக்கூலிகளும் ஆட்சியாளர்களும் அப்பட்டமாகப் புளுகுகின்றனர். உண்மையில் இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த்தேரில் இந்தியாவைப் பிணைக்கும் நாட்டு விரோத – மக்கள் விரோத ஒப்பந்தமாகும்.
மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம், பத்தாண்டுகளுக்குப் பின்னர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், அது நமது நாட்டின் மின்சாரத் தேவையில் ஏறத்தாழ 5% மட்டுமே நிறைவு செய்யும்.




இப்பெருந்தொகையைக் கொண்டு அனல், புனல், காற்றாலை, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் கூடுதல் மின்சாரம் பெற முடியும். இந்த வாய்ப்புகளைப் புறக்கணித்து விட்டு மிக அதிக விலை கொண்ட அணு மின்சாரம் தயாரிக்கத் துடிக்கிறது. அமெரிக்க விசுவாச அரசு.

இந்த உண்மைகளை விளக்கிப் பிரச்சாரம் செய்த மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (HRPC), கடந்த ஆகஸ்டு 15 போலி சுதந்திர நாளில் நாட்டின் அரைகுறை இறையான்மையையும் அமெரிக்காவுக்கு அடகு வைக்கும் இந்ந்த அடிமை ஒப்பந்தத்தின் நகல் எரிப்புப் போராட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் திருச்சியில் நடத்தியது. விண்ணதிரும் முழக்கங்களுடன் திருச்சி மையப் பேருந்து நிலையம் பெரியார் சிலையருகே காலை 11 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் போஜகுமார் தலைமை தாங்கினார் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து இவ்வமைப்பின் மாவட்டக் கிளை அமைப்பாளர்களும் முன்னணியாளர்களும் வழக்குரைஞர்களும் தோழமை அமைப்பினரும் திரண்டு நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர், இந்திய – அமெரிக்க அணுசக்தி துரோக ஒப்பந்த நகல் எரிக்கப்பட்டது. நெருப்பை பொட்டலம் கட்டிய கதையாக, இதனைத் தடுக்க முயன்ற போலீசார் முன்னணியாளர்களைக் கைது செய்து போலீசு வண்டியில் ஏற்றினர். அவ்வண்டியிலிருந்தும் முன்னணியாளர்கள் முழக்கமிட்டப்படியே எரிப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். கைதான போராளிகள் அனைவரும் நிபந்தனை அடிப்படையில் பின்னர் விதலை செய்யப்பட்டனர்.


வீதியில் இறங்கி உணர்வுபூர்வமாக இவ்வமைப்பினர் நடத்திய இப்போராட்ட, அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிமைத்தனத்தையும் துரோகத்தனத்தையும் அம்பலப்படுத்திக் காட்டியுள்ளதோடு, உழைக்கும் மக்களிடமும் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் நாட்டுப்பற்றாளர்களிடமும் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

பு.ஜ. செய்தியாளர்கள்.

தொழிலாளர்களின் பி.எப். பணம் தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து பு.ஜ.தொ.முவின் பிரச்சாரம் - ஆர்ப்பாட்டம்.

கடந்த ஜூலை 22 –இல் நடந்து முடிந்த நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுபின் போது பணப்பெட்டி கொடுத்தும் பதவி ஆசை காட்டியும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டவுடனேயே, அப்பட்டமாக மறுகாலனியாக்கக் கொள்கைகளைச் செயல்படுத்தக் கிளம்பிவிட்டது காங்கிரசு கூட்டனி அரசு. எம்.பி.க்களை விலைக்கு வாங்க உதவிய தரகுப் பெரு முதலாளிகளுக்குக் காணிக்கை செலுத்தும் வகையில், தொழிலாளர்களின் 56 ஆண்டுகால சேமநல நிதி (பிராவிடண்ட் பண்ட்)யான ரூ. 2.5 லட்சம் கோடியை ரிலையன்ஸ் உள்ளிட்ட மூன்று பெரும் முதலாளித்துவ நிறுவனங்களிடம் கடந்த ஜூலை இறுதியில் தாரை வார்த்துள்ளது. இந்திய அரசின் ஸ்டேட் வங்கி பராமரித்து வந்த இந்நிதியைத் தற்போது ரிலையன்ஸ் கேபிடல், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்சியல், ஹெச்.எஸ்.பி.சி. மற்றும் ஸ்டேட் வங்கி ஆகிய நான்கு நிறுவனஙளுக்கு பங்கு பிரித்துத் தந்துள்ளது, மன்மோகன் சிங் அரசு. இதன் மூலம் தொழிலாளர்களின் உழைப்பால் திரண்ட கோடானுகோடி நிதியையும் தொழிலாளர்களின் எதிர்கால வாழ்வையும் பன்னாட்டு – இந்நாட்டு பெருமுதலாளிகளின் இலாப வெறிக்குப் பலியிட்டிருக்கிறது. இதன்மூலம் இப்பெருமுதலாளித்துவ நிறுவனங்களின் தொழிலுக்கான நிதியாதாரத்தை உருவாக்கித் தரும் தரகு வேலையை சிங் – சிதம்பரம் கும்பல் செய்துள்ளது. பங்குச்சந்தை தரக்வன் அர்சத் மேத்தாவின் சூதாட்டத் திருவிளையாடலில் பல லட்சம் கோடிகள் சூறையாடப்பட்டதைப் போல, பி.எப். பணத்தை சந்தை சூதாட்டத்தில் இறக்கி இந்நிறுவனகள் சூறையாட ஏற்பாடு செய்துள்ளது.

இது, தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்னும் மறுகாலனியாக்கத் தாக்குதல்; மன்மோகன் சிங் – சிதம்பரம் கும்பலின் உலக வங்கிக் கைக்கூலித்தனத்தின் குறியீடு என்பதை விளக்கி தமிழகமெங்கும் பிரச்சார இயக்கத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வீச்சாக நடத்தி வருகிறது. “தொழிலாளர்களின் பி.எப். பணம் தனியாரிடம் ஒப்படைப்பு! கள்ளனிடமே சாவியைக் கொடுத்த அயோக்கியத்தனம்!” என்ற முழக்கத்துடன் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளுடன் இணைந்து துண்டு பிரசுரம், சுவரொட்டிகள், தெருமுனைக் கூட்டங்கள், ஆலைவாயிற் கூட்டங்கள் வாயிலாக பு.ஜ.தொ.மு. தொழிலாளர்களிடம் பிரச்சாரம் செய்து அரசியல் விழிப்புணர்வூட்டி வருகிறது.

எந்த ஓட்டுக் கட்சியும் தொழிற்சங்கங்களும் தொழிலாளி வர்க்கத்தின் மீது ஏவி விடப்பட்டுள்ள இத்தாக்குதலுக்கு எதிராகப் போராட்டங்களைக் கட்டியமைக்க முன்வராத நிலையில், சென்னை – மெமோரியல் அரங்கம் அருகில் 06.08.08 அன்று பு.ஜ.தொ.மு. எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பு.ஜ.தொ.மு. மாநிலச் செயலர் தோழர் சுப.தங்கராசு தலைமையில் விண்ணதிரும் முழக்கங்களுடன் திரளான தொழிலாளர்களின் பங்கேற்புடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், தனியார்மயம் – தாராளமயத்தின் கோரகுகத்தைத் திரைகிழித்தது. தொழிலாளர்கள் ஓரணியில் திரண்டு போராட அறைகூவுவதாக அமைந்தது.

தொழில் நகரமான ஓசூரில் இயங்கி வரும் பு.ஜ.தொ.மு. தனது தோழமை அமைப்புகளுடன் இணைந்து 11.08.08 அன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, தொழிலாளர் சேமநல நிதியை தரகுப் பெருமுதலாளிகளுக்குத் தாரை வார்த்த மன்மோகன் சிங் – சிதம்பரம் கும்பலை எதிர்த்து போர்க்குணமிக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. கண்டன முழக்கங்கள் எங்கும் எதிரொலிக்க தோழர் சங்கர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் தொழிலாளர்களிடமும் உழைக்கும் மக்களிடமும் போராட்ட உணர்வூட்டி புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்களோடு முடங்கி விடாமல், “கொள்ளை போகிறது தொழிலாளர் உழைப்பு! அள்ளிக் கொடுப்பதோ காங்கிரசு கும்பல்! சுருட்டப் போவதோ பன்னாட்டு – இந்நாட்டுக் கம்பெனிகள்!” எனும் முழக்கத்துடன் பி.எப். பணத்தைத் தாரை வார்த்துள்ள காங்கிரசு கூட்டனி அரசுக்கு எதிராகப் போராட அறைகூவி மாநிலமெங்கும் தொடர் பிரச்சார இயக்கத்தை பு.ஜ.தொ.மு. நடத்தி வருகிறது.

- பு.ஜ. செய்தியாளர்கள்