Monday, August 4, 2008

ஓசூரை ஆக்கிரமிக்க வரும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை விரட்டியடிப்போம்!


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேன்கனிக்கோட்டை வட்டங்களைச் சேர்ந்த அச்செட்டிப்பள்ளி, ஒன்னல்வாடி, பைரமங்கலம், குந்துமாரனப்பள்ளி ஊராட்சிகளில் 3600 ஏக்கர் நிலங்களை உள்ளடக்கி அறிவிக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு, நிலங்களைக் கையகப் படுத்துவதற்கான அரசாணை கடந்த ஜூன் 11-ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், தமிழக அரசுக்கும், ஜி.எம்.ஆர். நிறுவனத்துக்கும் பல்தொழில்நுட்பம் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க ஒப்பந்தம் கயெழுத்தானதைத் தொடர்ந்து, தற்போது நிலப்பறிப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் நிலங்களைக் கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட அளவீட்டின்படி, 2930 ஏக்கர் வரை வறண்ட நிலங்கள் என்றும், 363 ஏக்கர் வரை புறம்போக்கு நிலங்கள் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இப்பகுதியில் ஏறத்தாழ 2500 ஏக்கர் பரப்பளவில் ஆழ்துளை கிணறுகள் மூலம் காய்கறிகள் பயரிடப்பட்டு வருகின்றன. இவ்விளை நிலங்களை ஆக்கிரமித்து விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறித்து சி.பொ.மண்டலம் நிறுவக் கிளம்பியுள்ளது மு.க.அரசு. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், சி.பொ.மண்டலத்துக்கு எங்கள் விளைநிலங்களை வழங்க மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடியேற்றினர்.

இதன் தொடர்ச்சியாக, இப்பகுதி விவசாயிகளின் அழைப்பின் பேரில் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் தலைமையேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இரயில் மறீயல் போராட்டம் நடத்த முயன்று கைதாகினர். தா.பாண்டியனோ, "நாங்கள் சி.பொ.மண்டலத்துக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால் விளைநிலங்களை ஆக்கிரமித்து விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கக் கூடாது" என்கிறார்.

சி.பொ.மண்டலம் என்பது பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பளிக்கும் தொழிற்பேட்டை அல்ல; இது, நாட்டையே அடிமையாக்க வரும் அன்னியப் பிரதேசம் என்று நிரூபிக்கப்பட்ட பிறகும், சி.பொ.மண்டலத்தை ஆதரித்து, அதேசமயம் விவசாயிகளின் எதிர்ப்பைச் சாதகமாக்கிக் கொண்டு ஆதாயமடையத் துடிக்கின்றனர் வலதுகள்.

கடந்த ஆண்டில் சி.பொ. மண்டலத்துக்கு எதிராக சவடால் அடித்து, இப்பகுதியில் மக்களிடம் கருத்துக்கேட்பு நாடகமும், கருத்தரங்கமும் நடத்தி "எல்லோரும் வீட்டிற்குச் சென்று நிம்மதியாகத் தூங்குங்கள்; சி.பொ.மண்டலம் வராது; நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று வீரவசனம் பேசிய பா.ம.கவின் இராமதாசு, இப்போது அரசாணை வெளியாகிய பின்னர் எட்டிக்கூட பார்க்கவில்லை. "சவுண்டு" கொடுக்கவுமில்லை.


மறுபுறம், இத்தகைய ஓட்டுப் பொறுக்கிகளைப் புறக்கணித்துவிட்டு தங்களை அமைப்பாக்கிக் கொண்டு போராடிய மே.வங்கத்தின் நந்திகிராம மக்கள் சி.பொ.மண்டலத்தை விரட்டியடித்துள்ளனர். கோவா மாநில மக்களும் இதே வழியில் போராடி முதற்கட்ட வெற்றியைச் சாதித்துள்ளனர். ஒரிசா மாநில மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் முன்னேறி வருகின்றனர்.

இந்த உண்மைகளை விளக்கியும், ஏற்கெனவே இப்பகுதியில் சி.பொ.மண்டலத்துக்கு எதிராக விவசாயிகளைத் திரட்டி கருத்தரங்கம், ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளதோடு, தொடர்ந்து பிரச்சாரத்தை நடத்திவரும் விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் கடந்த 21.07.2008 அன்று ஓசூர் பழைய பேருந்து நிலையம் முன்பு "நாட்டை மீண்டும் அடிமையாக்கவரும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை விரட்டியடிப்போம்" என்ற முழக்கத்துடன் சாலை மறியல் போராட்டத்தை நடத்தின. தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து விவசாயிகளும் விவசாயிகள் இயக்க முன்னோடிகளும் பெண்கள் - குழந்தைகளுடன் திரண்டு, விண்ணதிரும் முழக்கங்களுடன் நடத்திய இச்சாலை மறியல் போராட்டம் நந்திகிராம மக்களின் வழியில் ஓசூர் மக்களும் சி.பொ.மண்டலத்தை விரட்டியடிப்பார்கள் என்பதை முன்னறிவிப்பதாக அமைந்தது.

‘புதிய ஜனநாயகம்’,
ஆகஸ்ட் 2008

அணு சக்தி ஒப்பந்தம்: அம்பலமானது நாடாளுமன்ற போலி ஜனநாயகம்!


‘புதிய ஜனநாயகம்’,
ஆகஸ்ட் 2008

Wednesday, July 23, 2008

தொழிலாளர்களின் உரிமை பறிப்புக்கு எதிராக வேலை நிறுத்தம் – ஆர்ப்பாட்டம்


மறுகாலனியாக்கச் சூழலில், தொழிலாளர்களின் சட்டப் பூர்வ உரிமைகள் எவ்வாறு நசுக்கப்பட்டு வருகின்றன என்பதை ஓசூரிலுள்ள அசோக் லேலண்டு ஆலையில் தொடரும் கொத்தடிமைத்தனமே நிரூபித்துக்காட்டுகிறது. ஓசூரிலுள்ள அசோக் லேலண்டு ஆலையில் நிரந்தரத் தொழிலாளர்கள் 460 பேரும், தற்காலிக-ஒப்பந்த-பயிற்சித் தொழிலாளர்கள் என ஏறத்தாழ 3000 பேரும் வேலை செய்கின்றனர். 240 நாட்கள் வேலை செய்தால் அத்தொழிலாளியை நிரந்தரம் செய்யவேண்டும் என்று சட்டம் இருந்தாலும், ஆலை நிர்வாகம் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எந்த உரிமையும் சலுகையுமின்றி மூன்றாண்டுகள் கொத்தடிமையாக வேலை செய்து நிர்வாகம் நற்சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே தற்காலிக – பயிற்சித் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்களோ, எவ்விதப் பாதுகாப்புச் சாதனங்களுமின்றி வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதோடு, காண்டிராக்டர்களின் கொடிய சுரண்டலுக்கும் ஆளாகி நிற்கிறார்கள்.

தற்காலிகத் தொழிலாளர்கள் காலை 7:30 மணிக்கு ஆலைக்குள் நுழைந்தால், பணி நேரப்படி 4:30 மணிக்கு அவர்களுக்கு வேலை முடிந்தாலும், மாலை 6 – 7 மணி வரை கட்டாயமாக வேலை வாங்கப்படுகின்றனர். இதுதவிர, “Com-off” என்ற பெயரில் ஒரு சேர இரண்டு ஷிப்ட் (16 மணி நேரம்) வேலை வாங்கிக் கொண்டு, சட்டப்படி தரவேண்டிய இரட்டிப்பு ஊதியத்தைத் தராமல் ஏய்ப்பது, சீருடை-பாதுகாப்புச்சாதனங்கள் இன்றி வேலை செய்ய நிர்பந்திப்பது, மருந்து ஈட்டுறுதிக்காகவும் சேமநல நிதிக்காகவும் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொண்டு அதற்கான அடையாள அட்டை வழங்காமல் ஏய்ப்பது, உணவகத்தில் தரமற்ற உணவைக் கொடுத்து புதிய வகை தீண்டாமையைப் பின்பற்றுவது, தொழிலாளர்களைக் கீழ்த்தரமாக ஏசுவதோடு, உற்பத்திப் பொருட்களை நாசமாக்கி விட்டதாக வீண்பழி சுமத்தி மிரட்டிப் பணம் பறிப்பது என நிர்வாகத்தின் அட்டூழியங்கள் கேள்விமுறையின்றித் தொடர்கின்றன. தற்காலிக-பயிற்சித் தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரண்டு போராடினால் மட்டுமே உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்பதை உணர்த்தி, லேலண்டு ஆலையில் இயங்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு அமைப்பாக்கி வந்தது. இந்நிலையில், நிர்வாகத்தால் ஏவிவிடப்பட்ட ரவுடிகள் தற்காலிகத் தொழிலாளர்களைத் தாக்கியதை எதிர்த்து, பு.ஜ.தொ.மு. தலைமையில் தற்காலிகத் தொழிலாளர்கள் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதியன்று திடீர் வேலை நிறுத்தம் செய்தனர். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று தொழிலாளர்களைச் சமரசப்படுத்திய சி.ஐ.டி.யூ. சங்கம், பின்னர் இத்தொழிலாளர்களைக் கைகழுவியது. நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்ற சங்கங்களோ, கண்டும் காணாமல் அலட்சியப்படுத்தின.

தொழிலாளர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு கடந்த ஜூன் 4-ஆம் தேதியன்று மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை ந்சாடகமாடிய நிர்வாகமும் போலீசும் தொழிலாளர்களை மிரட்டிப் பணியவைக்க முயன்றன. இதை அம்பலப்படுத்தி மீண்டும் வேலை நிறுத்தத்துக்கான பிரச்சாரத்தில் ஈஎஉபட்ட தொழிலாளர்கள், சங்கமாக அணிதிரளாமல் நிர்வாகத்தைப் பணிய வைக்க முடியாது என்பதை உணர்ந்து பு.ஜ.தொ.மு. தலைமையிலான ஒப்பந்த மற்றும் தற்காலிகத் தொழிலாளர் சங்கத்தில் அணிதிரளத் தொடங்கினர். ஜூன் 17-ஆம் தேதியன்று மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆலை வாயிலில் தொழிலாளர்கள் திரளும் முன்பே, பெருமளவில் போலீசைக் குவித்து போராட்டத்தை நடத்த விடாமல் கலைத்த நிர்வாகம், முன்னணித் தொழிலாளர்கள் 5 பேரை வேலை நீக்கம் செய்து பழிவாங்கியது. இந்த அடாவடித்தனத்தை எதிர்த்தும், தற்காலிகத் தொழிலாளர்களின் சட்ட பூர்வ உரிமைகளை வலியுருத்தியும் பு.ஜ.தொ.மு. தலைமையில் ஆலைவாயில் முன்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

‘புதிய ஜனநாயகம்’,
ஜூலை 2008